ஓசூர் அண்ணா நகரில் பொருத்தப்பட்ட 20 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை ஓசூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் துவக்கி வைத்தார். ஓசூர் பகுதியில் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களை வீடுகள், தெருக்கள் உள்ளிட்ட நகரத்தின் பல்வேறு இடங்களில் அமைக்க வேண்டும் என போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி ஓசூர் அண்ணா நகர் பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் அப்பகுதியில் முதல் கட்டமாக 20 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. அதன் செயல்பாடுகள் இன்று துவக்கி வைக்கப்பட்டன. கண்காணிப்பு கேமரா மூலம் பல வகையான குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் எனவே அனைத்து தரப்பு மக்களும் தங்களது வீடுகள் தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆய்வாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.