
புதுக்கடை: பெண் தற்கொலை; எலக்ட்ரீசியனுக்கு 12 ஆண்டு சிறை
கிள்ளியூர் அருகே உள்ள வாழைப்பழஞ்சி விளைப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் எலக்ட்ரீசியன். இவரது உறவினருக்கு 22 வயதான மகள் உள்ளார். அந்தப் பெண் இவருக்குத் தங்கை உறவு ஆவார். கடந்த 11-10-2018 அன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, பெண்ணிடம் ராஜேஷ் திடீரென பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசார் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் (குழித்துறை முகாம்) நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரய்யா விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றவாளியான ராஜேஷுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம், பாலியல் துன்புறுத்தலில் 3 ஆண்டுகள், வீட்டில் அத்துமீறி நுழைந்ததில் 2 ஆண்டு என மொத்தம் 12 ஆண்டுகள் தண்டனை விதித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வின்ஸ்டன் ஆஜரானார்.