நித்திரவிளை அருகே இரயுமன்துறை தூண்டில் வளைவு பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளை பூத்துறை பகுதியில் சாலையில் கல் போட்டு ஊர் மக்கள் கடந்த நான்கு நாட்களாக தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இது சம்பந்தமாகவும், இரயுமன்துறை - தூத்தூர் எல்லையில் தாலுகா சர்வேயரால் போடப்பட்ட எல்லைக் கற்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பந்தமாகவும் நேற்று பூத்துறை பங்கு பணியாளர் இல்லத்தில் வைத்து கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
மீன்வளத்துறை உதவி இயக்குனர் செல்வராஜன், நித்திரவிளை எஸ்ஐ வில்சன், மற்றும் பூத்துறை பங்கு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் தூண்டில் வளைவு பணிக்கு தற்போது பாறாங்கல் கொண்டு செல்லும் சாலையை கான்கிரீட் போட்ட பிறகு கல் கொண்டு செல்லலாம் எனவும், பூத்துறை இரயுமன்துறை எல்லையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வேயர் அளந்து போடப்பட்ட எல்லைக்கல்லை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகு பேசலாம் என்று கூறியதை அடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.