கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே வாடிவிளை பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. நேற்று (செப்.,21) பிற்பகல் 3 மணி அளவில் வாலிபர் ஒருவர் கையில் வெட்டரிவாள் மற்றும் தேங்காய் உரிக்கும் கோலுடன் கோயிலுக்குள்ளே நுழைந்து அங்கிருந்த கண்ணாடி கூண்டை உடைத்து சிலையில் கிடந்த 12 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்திணையும் அள்ளிக் கொண்டிருந்தார்.
சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்றவுடன் அந்த வாலிபர் கையில் கிடைத்த பணத்தினையும் தங்கச் சங்கிலியையும் எடுத்துக்கொண்டு ஓடினார். இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருடியவர் அழகன்பாறை அருகே உள்ள காளிவிளை பகுதி டேவிட் ராஜ் (35). என்பது தெரிய வந்தது. இதற்கிடையே டேவிட் ராஜ் திருடிய தங்க செயினை ஒரு தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து அதில் கிடைத்த காசினை மது அருந்திவிட்டு மீதி தொகையை திங்கள் நகர் பேருந்து நிலையத்துக்குள் சென்று வீசி ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து போலீசார் அவனை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.