கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம் கடற்கரை அமைந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு துறைமுகப் பணி துவக்கியது. தற்போது சுமார் 400 கோடி ரூபாயை மதிப்பில் மேம்படுத்த துறைமுக பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 15 , 16 ஆம் தேதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் 2016 ஆம் ஆண்டில் போடப்பட்ட 100 மீட்டர் தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது. இதை பார்வையிடுவதற்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ இன்று (19-ம் தேதி) துறைமுக பகுதிக்கு வந்தார். அவருடன் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் உட்பட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து ராஜேஷ்குமார் எம்எல்ஏ கூறியதாவது: - தரம் குறைந்து இருப்பதால்தான் சிறிய கடல் அலைக்கு கூட இது தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு முகத்துவாரங்களும் தூண்டில் வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. குளச்சலில் தனியார் கட்டிய ஜேப்பியார் துறைமுகத்திற்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. ஆகவே இதை அரசு ஆராய்ந்து சரியான முறையில் தரமாக மீன்பிடி துறைமுகம் கட்ட வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு கடல் அலைக்கும் தடுப்புச் சுவர் சேதமடைவது தொடர் கதையாக நடந்து வரும். அரசினுடைய பணம் வீணாகப் போகும் சூழ்நிலை உள்ளது. ஆகவே இனியாவது மீன்பிடித் துறைமுகப் பணியை தரமாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.