கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பரமேஸ்வர பின்ன நகரம் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.
வருடந்தோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் ராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மூன்றாம் நாள் கருடசேவை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று ஏழாம் நாள் காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு திருத்தேர் வளாகத்திற்கு ராஜ நடையுடன் வலம் வந்தார். சிறப்பு தேரில் வாழை , மலர் தோரணம் , அலங்காரங்கள் செய்யப்பட்ட நிலையில், திருத்தேரில் எழுந்தருளி சிறப்பு தீபஆராதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் வடம்பிடித்து இழுக்க காஞ்சிபுரத்தின் ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இத்திருத்தேர் நிகழ்வில் திருக்கோயில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.