குளத்தின் கலிங்கல் சேதம் மண் கொட்டி மூடி மறைப்பு

67பார்த்தது
குளத்தின் கலிங்கல் சேதம் மண் கொட்டி மூடி மறைப்பு
சித்தாமூர் அருகே கொளத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட தேன்பாக்கம் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில், பொன்னியம்மன் கோவில் குளம் உள்ளது.

பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், குளம் துார்ந்து, கரைகள் சிதிலமடைந்து, பாசிகள் படர்ந்து, செடிகள் வளர்ந்து புதர் மண்டி இருந்தது.

குளத்தை சீரமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்; கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்கும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், 2022 - 23ம் ஆண்டு, அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டத்தின் கீழ், 14. 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், துார்வாரி, படிகள், தடுப்புச்சுவர் மற்றும் கலிங்கல் அமைத்து குளம் சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின்போது, குளத்தில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, புதிதாக அமைக்கப்பட்ட கலிங்கல் இடிந்து சேதமடைந்தது.

இதையடுத்து, தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கலிங்கல் இடிந்து சேதமடைந்ததை மறைக்க, மணல் கொட்டி கலிங்கல் மூடப்பட்டுள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள கலிங்கல் பகுதியை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி