திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை, பாரம்பரியத்துடன் உருவாக்கிய சிதம்பர சுவாமிகள், கண்ணகப்பட்டில் பூஜை செய்ய, வீர சைவ மடம் ஒன்றை நிறுவினார்.
இதன் அருகே, 1 ஏக்கர் பரப்பளவில் வேலாயுத தீர்த்த குளம் உள்ளது. கருங்கற்களால் படித்துறையுடன் அமைக்கப்பட்ட இக்குளம், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், குளத்தின் படித்துறை ஆங்காங்கே சரிந்து காணப்படுகிறது. மேலும், முட்செடி மற்றும் குப்பை குவிந்து அலங்கோலமாக காட்சியளித்தது.
பாரம்பரிய சிறப்பு கொண்ட இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக, செய்தி வெளியிடப்பட்டு வந்தது.
இதையடுத்து, கந்தசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், முதற்கட்டமாக 230 மீட்டர் நீளத்தில், 56. 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது முடிந்ததும் அடுத்தகட்ட பணிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, குளத்தின் உள்பகுதியில் படித்துறை உட்பட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.