சென்னை அடுத்த பெருங்குடி மண்டலம் புழுதிவாக்கத்தில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. ராமலிங்கா நகரில் செல்லும் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல், பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பிரதான குழாயில் இரண்டு முறைக்குமேல் உடைப்பு ஏற்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடைப்பு கண்டறிவதில் சிக்கல் இருப்பதால், சில நாட்களாக புழுதிவாக்கம், ஸ்ரீனிவாசாநகர், ராம்நகர், சிவப்பிரகாசம் நகர், பாகீரதி நகர் ஆகிய தெருக்களில் பாதாள சாக்கடை இயந்திர நுழைவு மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கி நிற்கிறது. அவ்வப்போது பெய்யும் மழையால், கழிவுநீர் பரவலாக கலந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, பாதாள சாக்கடை பிரதான குழாயை முழுமையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை விரைந்து கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.