செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு, நிலப்பிரச்னை, வேலை வாய்ப்பு, வங்கி கடன் உதவி, உள்ளாட்சி அமைப்புக்களில் அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக மக்கள் வந்து செல்கின்றனர்.
செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் செல்லும் அரசு பேருந்துகள், கலெக்டர் அலுவலகம் வழியாக செல்கின்றன. இதேபோல், மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டுக்கும் வந்து செல்கின்றன. ஆனால், கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தடம் எண் 121, 83 பேருந்துகளில், கலெக்டர் அலுவலகம் செல்லும் பயணியரை ஏற்ற மறுக்கின்றனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஆட்டோவில் கலெக்டர் அலுவலகம் வரவேண்டிய நிலை உள்ளது. இதனால், மக்களுக்கு கூடுதல் செலவு மற்றும் அலைச்சல் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, கலெக்டர் அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலக பகுதியில், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.