பள்ளி மாணவர்கள், அரசு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்வதை தவிர்க்க, கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு அடுத்த மெய்யூர், அத்திவாக்கம், சிதண்டிமண்டபம், பினாயூர், மாம்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியினர், பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனை, அத்தியாவசியத் தேவைக்கு, செங்கல்பட்டு வர வேண்டும். அதன்பின், பிற இடங்களுக்கு செல்கின்றனர். செங்கல்பட்டு - பினாயூர் தடத்தில், தடம் எண் டி9 டவுன் பஸ், காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படுகிறது. இதில், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரிக்கு கூட்ட நெரிசலுடன் சென்று வருகின்றனர்.
இதனால், மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான வகையில் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனை தவிர்க்க, கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, விழுப்பரம் கோட்டத்தின் காஞ்சிபுரம் அரசுப் போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் முதல்வர் தனி பிரிவிற்கு மனு அனுப்பி உள்ளனர்.
இந்த மனு மீது நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் நலன்கருதி, மேற்கண்ட தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.