ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் சமீர், 20. கடப்பாவை சேர்ந்தவர் அக்பர், 20. இருவரும், சேலையூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். இருவரும், நேற்று முன்தினம்(செப்.13) இரவு, கேம்ப் ரோடு சந்திப்பில் இருந்து அகரம் நோக்கி, கே. டி. எம். , இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
சேலையூர், ஜெகஜீவன்ராம் நகர் சந்திப்பு அருகே சென்ற போது, 'ஸ்பிளென்டர்' இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர்களை வழிமறித்தனர். போலீஸ் எனக்கூறிய அவர்கள், அருகிலுள்ள பூங்காவிற்கு அழைத்து சென்று, மாணவர்கள் இருவரையும் தாக்கி, அவர்களின் இரண்டு மொபைல் போன்களை பறித்தனர்.
பின்தொடர்ந்து வருமாறு கூறி, கஸ்பாபுரம், கோலாட்சி அம்மன் கோவில் அருகே சென்று, உடம்பில் சோதனை செய்வது போல் நடித்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மாணவர்களிடம் பணம் இல்லாததால், அவர்களின் கே. டி. எம். , இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.
மொபைல் போன் மற்றும் வாகனத்தை பறிகொடுத்த சோகத்துடன் நடந்து சென்ற மாணவர்கள், மப்பேடு சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவலை தெரிவித்தனர். அவர்கள், கஸ்பாபுரம் சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் இல்லை. இச்சம்பவம் தொடர்பாக, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.