மாவட்டத்தில் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 9.56 கோடி ரூபாய்க்கு கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில், 'நடப்பு நிதியாண்டில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க மொத்த திட்ட மதிப்பீடு ரூ.1,624.31 லட்சம் ஆகும். அதன்படி 2024ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2025ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி வரை பெறப்பட்ட 222 விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு, 147 விண்ணப்பங்களுக்கு 955.91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நிலுவை விண்ணப்பங்கள் மீதும் விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள இளைஞர்கள் இந்த திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்றார். கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.