ரிஷிவந்தியம்: அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் சிறப்பு

73பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மை வாய்ந்த கற்கோயில் என்பதனை கட்டடக் கலை வாயிலாகவும் இங்கு காணப்படும் கல்வெட்டுகளின் வாயிலாகவும் அறிய முடிகிறது. மேற்படி திருக்கோயில் புகழ்பெற்ற தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள வேடுவர்கள் வழிபட்ட தலமாகவும், நந்தி கிழக்கு நோக்கி உள்ளதால் இவ்வாலயம் சிறப்புடையது.

ஒரு சமயம் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் மிகுந்து ஊரில் புகும்போது அகத்திய முனிவர் நந்தி தேவரை வேண்டி நந்தி தேவரும் இந்த வெள்ளத்தைத் தடுக்க எண்ணி சுவாமியிடம் உத்தரவு பெற்று பின் திரும்பி ஊரின் பக்கம் தன் பார்வையைச் செலுத்தி வெள்ளத்தைத் தடுத்தார். இக்காரணத்தினால் இன்றளவும் சுவாமியும் சுவாமிக்கு முன்னால் உள்ள நந்தி எம்பெருமானும் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

அகத்தியர் இங்கு சுவாமியை வழிபட்ட காரணத்தினால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்ற திருநாமம் வழக்கத்தில் உள்ளது. இக்கோயில் மகாமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்தீஸ்வரர் இறைவனை நோக்கி அமைக்கப்படாமல் எதிர் திசையான பலிபீடத்தை அல்லது நுழைவு வாயிலை நோக்கி அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அமைப்புடன் காணப்படும் கோயில்கள் தமிழகத்தில் ஒரு சிலவே உள்ளன.

தொடர்புடைய செய்தி