மாநகராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்
மாநகராட்சி நிர்வாக இயக்குனரகம் உருவாக்க கோரிக்கை!!!
தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பி. கே. கோபால் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என். பாலகிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் இ. சந்திரமோகன் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் வி. ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
பொருளாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்திய தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
மாநகராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நகராட்சிகளுக்கு தனியே நிர்வாக இயக்குனரகம் உள்ளதை போல மாநகராட்சிகளுக்கென மாநகராட்சி நிர்வாக இயக்குனரகம் உருவாக்கப்பட வேண்டும்.