ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான தடகள போட்டி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் அதன் சுற்றுப்புற மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஈரோடு வ. உ. சி. விளையாட்டு மைதானம் அருகே பவானி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், இறுதி போட்டி நிறைவடைந்ததையொட்டி நேற்று (செப்.22) மாலை வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல துவங்கினர். இதில், பவானி சாலையில் தனியார் மண்டபத்தில் தங்கியிருந்த மாணவ-மாணவிகள் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி செல்வி (19), ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள், திடீரென செல்வியின் செல்போனை பறித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த செல்வி கூச்சலிட்டவாறே மர்மநபர்களை விரட்டினார். பொதுமக்களும் சத்தம் கேட்டு செல்போன் பறித்த நபர்களை பிடிக்க முற்பட்டனர். ஆனால், தப்பி சென்றனர். இச்சம்பவத்தை பார்த்த செல்வியின் உடன் வந்த தடகள மாணவ-மாணவிகள் பவானி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.