ஈரோட்டில் பிரபல தனியார் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே வீரபத்ர வீதியில் பிரபல தனியார் ஓட்டல் தங்கும் விடுதியுடன்(தி ரத்னா ரெசிடென்சி) செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டல் நிர்வாகத்திற்கு நேற்று இரவு சுமார் 7 மணியளவில் ஒரு மெயில் வந்தது. அதில், ஓட்டலில் இரவு 10 மணிக்குள் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்பி ஜவகர் அறிவுறுத்தலின்பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார், மோப்ப நாய் மூலம் ஓட்டல் முழுவதும் அங்குலம் அங்குலமாக நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். முன்னதாக, ஓட்டல் அறையில் தங்கியிருந்தவர்கள், பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.