ஈரோடு தாலுகா வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு வழங்குவதை போல மருத்துவப்படி ஆயிரம் ரூபாயாக தமிழக அரசு வழங்க வேண்டும். அனைத்து வியாதிகளுக்கும், அனைத்து மருத்துவமனைகளிலும் காசில்லா மருத்துவம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். காசில்லா மருத்துவம் பெறுவதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். ஓய்வூதிய தாரர்களுக்கு வழங்கப்பட்ட பணிக்கொடை பிடித்தம் செய்யும் காலத்தை 12 ஆண்டாக குறைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், மாவட்ட துணை தலைவர் ஹரிதாஸ், நிர்வாகிகள் பிரசன்னா, சுப்பிரமணியன், கதிர்வேல், சந்திரசேகரன் உள்ளிட்ட ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.