கண், ரத்த தானம் குறித்து புதுமண தம்பதி மாட்டு வண்டியை ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சத்தியமங்கலத்தை சேர்ந்த சரவணன்-லதா நாகேஸ்வரி தம்பதியின் மகள் ஐஸ்வரியா மீனாட்சி. ராசிபுரத்தை சேர்ந்த நாகராஜன்-விஜயலட்சுமி தம்பதியின் மகன் விக்னேஷ். இந்த நிலையில் விக்னேசுக்கும், ஐஸ்வரியா மீனாட்சிக்கும் ராசிபு ரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
பின்னர் புதுமண தம்பதி அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டியில் ஏறி ஓட்டி சென்றனர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். சேலம் பிரதான சாலையில் சிறிது தூரம் சென்று மாட்டு வண்டி மீண்டும் மண்டபத்தை அடைந்தது.
இதுகுறித்து புதுமண தம்பதி கூறும்போது, 'திருமணம் முடிந்தகையோடு உறவினர்கள் ஏற்பாட்டில் சாதாரணமாக ஊர்வலம் செல்வது வழக்கம். இதில் எங்கள் இருவருக்கும் விருப்பமில்லை. நாங்கள் இருவரும் படித்த பட்டதாரிகள். பொதுமக்களுக்கு ரத்ததானம், கண்தானம் குறித்து புதுமை யான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர். எனவே நாங்கள் மாட்டுவண்டியில் ரத்த தானம், கண்தானம், இயற்கை விவசாயம் செய்வது குறித்து பிளக்ஸ் பேனர்கள் கட்டி ஊர்வலமாக சென்றோம்' என்றனர்.