அங்கித் திவாரியின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

77பார்த்தது
அங்கித் திவாரியின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2023, டிச. 1-ஆம் தேதி கைது செய்தனா். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் நீதிமன்றம் இவருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது.

இதையடுத்து, சுமாா் 114 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், பிணையில் விடுவிக்கப்பட்டு, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையொப்பமிட்டு வருகிறாா்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் கையொப்பமிடுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, அங்கித் திவாரி தரப்பில் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில், நீண்ட தொலைவிலிருந்து நாள்தோறும் நீதிமன்றத்துக்கு வருவதில் சிரமம் இருப்பதால், நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தரப்பில் விளக்கம் அளிப்பதற்கு 10 நாள்கள் அவகாசம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஜெ. மோகனா ஒத்திவைத்தாா்.

தொடர்புடைய செய்தி