திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24. 10. 2024 மற்றும் 25. 10. 2024 இரு தினங்கள் கனமழை பெய்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே நத்தம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகபட்ச அளவாக 66. 50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூரில் திருமணிமுத்தாற்றில் அதிக அளவில் நீர்வரத்து இருந்தது. முளையூருக்கு கிழக்கே திருமணிமுத்தாற்றின் கரைக்கு அப்பால் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் நிலங்களில் விளையும் விலை பொருட்களை நத்தம் கொண்டு செல்வதற்கும் மாணவ மாணவிகள் முளையூரில் உள்ள அரசு பள்ளிக்குச் செல்வதற்கும் இந்த ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும்.
மழை விட்டு மூன்று நாட்கள் ஆகியும் ஆற்றில் நீர் வரத்து இன்னும் குறைந்த பாடில்லை. முழங்கால் அளவிற்கு மேல் உள்ள தண்ணீரில் பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஆற்றைக் கடந்து செல்லும் நிலை உள்ளது. காலம் காலமாக நீடித்து வரும் இந்த நிலை மாற அப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.