திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரண்மனைக்குளம் புதூரை சேர்ந்தவர் நாகன் (வயது 70). சலவைத் தொழிலாளியான இவர் அவரது மனைவி பொன்னம்மாள் (64) ஆகிய இருவரும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையினால் அரண்மனைக்குளம் புதூரில் உள்ள நாகன் என்பவருக்கு சொந்தமான செம்மண்ணால் கட்டப்பட்ட பழமையான வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து விட்டது. இரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டு சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் வீட்டில் இருந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இவர்களுக்கு மாற்று இடம் இல்லாத காரணத்தினால் இடிந்த நிலையில் உள்ள அதே வீட்டில் வசிக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. எனவே வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையில் வசித்து வரும் வயதான முதியவர்களுக்கு அரசு உதவிக்கரம் மீட்ட முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.