தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை விற்பனைக்காகவே பிரத்தியேகமாக நடைபெறும் வாரச்சந்தை நடைபெற்று வருவது வழக்கம். நேற்று நவம்பர் 10 கூடிய வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.
128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ஆரம்ப விலையாக 8000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 13, 000 வரை விற்பனையானது. மேலும் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஒரு மூட்டைக்கு 3000 ரூபாய் விலை சரிந்து விற்பனையானது. நேற்று ஒரே நாளில் 3. 38 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.