கோவை: மேற்கு புறவழிச்சாலை பணி: 47% முடிவு!

82பார்த்தது
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தணிக்க, கோவை மாநகரில் கிழக்கு மற்றும் மேற்கு புறவழிச்சாலைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 2011-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மேற்கு புறவழிச்சாலை பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவிலிருந்து நீலகிரி செல்லும் வாகனங்கள் கோவை நகருக்குள் வராமல், மதுக்கரை வழியாக பேரூர், வடவள்ளி வழியாக நரசிம்மநாயக்கன்பாளையம் செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு மொத்தம் 143 எக்டேர் நிலம் தேவைப்படுகிறது.
இந்த சாலை அமைக்கும் பணி மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட பணி மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை 11. 8 கிலோ மீட்டர் தூரத்தில் நடைபெறுகிறது. இதற்காக ரூ. 171 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி தொடங்கப்பட்டது. தற்போது வரை 47% பணிகள் முடிவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேரூர் பகுதியில் மேம்பாலம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து, 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் மற்றும் கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி ஆகியோர் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி