
கோவை: கொலை வழக்கு; வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
கோவை அருகே கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் ராமன் (வயது 39) கொலை வழக்கில் கைதான தூத்துக்குடி மாவட்டம் முத்துராமபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற சண்முகராஜ் (24) மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இருவரும் கோவை வெள்ளியம்பாளையம் பிரிவில் உள்ள மணிகண்டன், லட்சுமணன் என்பவர்களுக்குச் சொந்தமான ஓட்டலில் சமையல் கலைஞர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி ராமன் கொலை செய்யப்பட்டிருந்தார். சங்கரும் ராமனும் சேர்ந்து மது அருந்திவிட்டு அறையில் இருந்தபோது அடிதடி ஏற்பட்டதாகவும், சங்கர் கத்தியால் ராமனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெள்ளியம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரைக் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.