தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் எப்போதும் சிந்தித்துத்தான் ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள். எங்கள் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்து அதை அதிகப்படுத்தியுள்ளனர். ஆனால், அதை எம். பிக்களாக மாற்ற முடியவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தேசிய அளவில் ஒரு சரித்திரத்தைப் படைத்து, பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கக் கூடிய ஓர் அற்புதமான விஷயத்தை பிரதமர் மோடி செய்து காட்டியிருக்கிறார். தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து உலக அரசியல் வரலாற்றில், மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமருவது ஒரு கடினமான செயல். அதை தேசிய ஜனநாயக கூட்டணி முறியடித்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவிருக்கிறது. அனைத்து வாக்களர்களுக்கும் நாங்கள் நன்றி கடன்பட்டிருக்கிறோம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அண்ணாமலை கூறினார்.