காங்கிரஸை வலுப்படுத்த கூடாதென சொல்வது தவறு: செல்வப்பெருந்தகை

81பார்த்தது
திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை என்று சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கு. செல்வப்பெருந்தகை பேசினார்.

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு. செல்வப்பெருந்தகை பேசியது, துணிந்து நின்றால்தான், நாம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட முடியும். அனைவரும் தலைவர் ராகுல் காந்தி பிரதமராகவில்லை என்ற கவலையுடன் இருக்கிறோம். காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

நம்மைப் போலவே, இந்த தேசத்தின் மக்களும் ராகுல் காந்திதான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், அவர் இன்று அரசியலைப் பார்க்கவில்லை. நான் உணர்ந்த வரை, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்ற பார்வை ராகுல் காந்திக்கு இருந்தது. அதைத்தான் தீரப்பார்வை என்று கூறுவார்கள் என்று தெரிவித்தார்.