டாஸ்மாக் ஊழல் பணம் ரூ. 1, 000 கோடி யாருக்கு போனது என்பது தொடர்பான அமலாக்கத் துறை புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மது வணிகத்துக்கு பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைகளில் குறைந்தது ரூ. 1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து புதிது புதிதாக குற்றச்சாட்டுகள் வெளியாகிவரும் நிலையில் அவற்றை முழுமையாக மறைத்து விட்டு, திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ள ரூ. 1, 000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியம் ஆகும். தமிழகக் காவல் துறை அதை செய்யும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. எனவே, டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சி. பி. ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.