சிறையில் துறை இல்லாத அமைச்சராக இருந்தபோதே சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று அஞ்சப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது சாட்சிகளை கலைக்க மாட்டாரா' என பா. ம. க. , நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி துணை முதல்வர் ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே. ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டு உள்ளனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் இருந்த போதும், துறை இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி நீடித்தார். அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதைக் காரணம் காட்டித் தான் அவருக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வந்தது.
அதைத் தொடர்ந்து தான் அவர் பதவியிலிருந்து விலகினார். சிறையிலிருந்து பிணையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு மீண்டும் அவர் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். சிறையில் துறை இல்லாத அமைச்சராக இருந்த போதே சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று அஞ்சப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது சாட்சிகளை கலைக்க மாட்டாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.