தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போதைப் பொருள் விற்பனைதான் காரணம் எனவும் இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மேலும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் தொடர்ந்து வலியுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில் கிரிண்டர் (Grindr) மொபைல் ஆப்-ஐ தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10-ல் 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரிண்டர் ஆப்-ஐ உடனடியாக தடைசெய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் கும்பலுக்கான முக்கிய தொடர்பு சாதனமாக கிரிண்டர் ஆப் பயன்படுத்தப்படுவது விசாரணையில் அம்பலமாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.