வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி மனு

66பார்த்தது
வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி மனு
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது வரும் ஜூன் 14 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி அறிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தேதி குறிப்பிட்டு தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் ஆவணங்களை வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும், என்றும் கோரப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ். அல்லி, சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது வரும் ஜூன் 14 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும், என அறிவித்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 14 அன்று செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி