சென்னை போயஸ்கார்டன், கஸ்தூரி எஸ்டேட் 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வனிதா சித்தார்த். இவர் தன்னுடைய கணவர் சித்தார்த்துடன் சேர்ந்து பிசினஸ் செய்து வருகிறார். கடந்த 7-ம் தேதி இவர் வீட்டில் உள்ள லாக்கரைத் திறந்து நகைகளை சரிபார்த்திருக்கிறார். அப்போது சுமார் 24 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளிப் பொருள்கள், 23,500 ரூபாய் மாயமாகியிருந்தது.
அதிர்ச்சியடைந்த வனிதா சித்தார்த், இதுதொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் மேற்பார்வையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொழிலதிபர் வனிதா சித்தார்த் வீடு அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். வீட்டில் வேலைப்பார்ப்பவர்களின் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது.
விசாரணை நடத்தியதில் வனிதா சித்தார்த் வீட்டில் வேலை செய்யும் சங்கீதா (25) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லாக்கரைத் திறந்து திருடியதை சங்கீதா ஒப்புக்கொண்டார். இதையடுத்து சங்கீதாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 24 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கீதாவை போலீஸார் சிறையில் அடைத்தனர்.