விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கானா விலக்கு பகுதியில், அருப்புக்கோட்டை - வாலிநோக்கம் சாலையில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு ரூ. 36 கோடி 40 இலட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். ரூ. 36.40 கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவில் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், அமைச்சர் தங்கம் தென்னரசு நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தினர்.
மேலும் அரசு நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படாத இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படாத நிகழ்வு குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். அதே போல் அமைச்சரை வரவேற்க பெண்களை நீண்ட நேரம் கொழுத்தும் வெயிலில் நிற்க வைத்து அமைச்சரை வரவேற்க மலர் தூவ வைத்ததால் வெயிலில் தாக்கம் தாங்க முடியாமல் போனதாலோ என்னவோ சில பெண்கள் அமைச்சரின் மீது மலர்களை தூவாமல் மூஞ்சியில் எறிவது போல் மலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.