ஆரோவில் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆரோவில் மற்றும் சுற்றியுள்ள இடைஞ்சாவடி, குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், கோட்டக்கரை, சின்ன முதலியார்சாவடி, சின்ன கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கெஸ்ட் அவுஸ்கள் உள்ளன.
இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள், கஞ்சா போதையில் திரிவது அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை, கொடைக்கானல், பெங்களூரு பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்யும் புரோக்கர்கள், சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து, 'கல்லா' கட்டி வருகின்றனர். பழைய வழக்குகளில் ஆஜராகாமல் இருக்கும் நபர்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டும், தனிப்படை போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டு கொள்வதே இல்லை.
இதனால் கஞ்சா வியாபாரிகளின் காட்டில் அடை மழை பெய்து வருகிறது. ஆரோவில் பகுதியில் கஞ்சா விற்பனை குறைந்துள்ளதாக, உயரதிகாரிகளுக்கு கீழ்மட்டத்தில் உள்ள போலீசார் ரிப்போர்ட் அளித்து விடுகின்றனர். இதையே காரணமாக வைத்துக் கொண்டு, கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. இதை தடுக்க வேண்டிய போலீசாரும், வியாபாரிகள் குறித்த சரியான தகவல் திரட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.