விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே குடிநீரில் கழிவு நீா் கலப்பதாகக்கூறி கிராம மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டிவனம் -மரக்காணம் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சீா்படுத்தும் பணிகள் நிறைவடையாமல் உள்ளது.
இந்த நிலையில், வெள்ளகுளம் பகுதியில் குடிநீா் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பள்ளங்களில் தேங்கும் தண்ணீா் குடிநீரில் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதை சீா்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த வெள்ளகுளம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாய்களை சீரமைக்க வேண்டும், சுகாதாரமான முறையில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதனால், திண்டிவனம்-மரக்காணம் சாலையில் போக்குவரத்துத் தடைபட்டது. தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா்.