*ஆம்பூர் அருகே சிறுமியை திருமணம் செய்வதாகக்கூறி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு*
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா உமராபாத் பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் மகன் இன்பகுமார் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடாம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வேலைக்காக இன்பகுமார் ஆட்டோவில் செல்லும்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து 20. 2. 2020 ஆம் தேதி சிறுமியை இன்பகுமார் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி அவரை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இதுகுறித்து சிறுமி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இன்பகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அப்போது இன்பகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக ஒரு ஆண்டுகள் சிறைதண்டனையும் வழங்கி மாவட்ட அமர்வு நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு அளித்தார். அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் பி. டி. சரவணன் வாதாடினார்.