திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் ஸ்ரீஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கிராமத்தில் பழைமையான ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவிநாயகர் சந்நிதி, ஸ்ரீமேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மன் சந்நிதி, நவக்கிரக சந்நிதி, ஸ்ரீகெங்கையம்மன் சந்நிதிகளும் உள்ளன.
இங்கு புதிதாக ஸ்ரீஐயப்பன் சுவாமி கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, இரவு 8 மணிக்கு முதல் கால பூர்ணாஹுதி, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.
புதன்கிழமை காலை 6 மணிக்கு 2-ஆம் கால யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று 9.30 மணிக்கு ஸ்ரீஐயப்பன் மூலவர் சந்நிதி, கோயில் கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.