உடுமலை-திருமூர்த்தி மலை சாலையில் இன்று சரக்கு வாகனம் ஒன்று கட்டுமான உபகரணங்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. வாகனம் போடிபட்டி அருகே சென்ற போது திடீரென நிலை குழைந்து விபத்துக்கு உள்ளானது. அப்போது வாகனத்தில் இருந்து கட்டுமான உபகரணங்கள் சாலையில் சிதறியது. எதிர்பாராத இந்த நிகழ்வில் சாலையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த ஆண் உட்பட இரண்டு பெண் குழந்தைகள் காயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணமாகும். அதிகப்படியான எடையுடன் கூடிய பொருட்களை கொண்டு வந்து தரைமட்ட பாலத்தில் ஏறிய போது விபத்து நிகழ்ந்தது. உடுமலை திருமூர்த்தி மலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு சிலர் அஜாக்கிரதையோடு செய்யும் நிகழ்வால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. இதே போன்று அதிகப்படியான எடையை ஏற்றிக் கொண்டு உடுமலை பகுதியில் வாகனங்கள் வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. இவற்றை கண்காணித்து தகுந்த அபதாரம் விதித்தால் இது போன்ற நிகழ்வுகள் ஆரம்பத்திலேயே தடுக்க இயலும். உயிரிழப்புகளும், விபத்துகளும் நேராது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.