அதிமுக ஊராட்சி மன்றத் தலைவி வீட்டில் ரூ. 1 கோடி பறிமுதல்

4220பார்த்தது
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், எட்டரை கிராமம் குடித்தெருவைச் சோ்ந்தவா் திவ்யா(30). இவா் எட்டரை கிராம ஊராட்சித் தலைவராக உள்ளாா். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரான மு. பரஞ்சோதியின் உறவினா் எனக் கூறப்படுகிறது. திவ்யாவின் கணவா் அன்பரசன் (43) திருச்சி மாவட்ட அதிமுகவில் பேரவை இணைச் செயலராக உள்ளாா். இந்நிலையில், திவ்யா வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, பறக்கும் படை அதிகாரி கோமதி தலைமையில் ஜீயபுரம் டி. எஸ். பி. பாலசந்திரன் முன்னிலையில் பறக்கும் படையினா் திவ்யா வீட்டில் இரவில் அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீட்டிற்குள் இருந்த டிராவல் பேக்குகளில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், வருமான வரித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு சென்ற வருமான வரித்துறையினா் பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், பணம் எண்ணும் இயந்திரங்களைக் கொண்டு வருமான வரித்துறையினா் பணத்தை கணக்கிட்டு வருகின்றனா். எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த அதிகாரபூா்வத் தகவல் இல்லை

தொடர்புடைய செய்தி