தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமி புரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் தற்போது மதுரை ஜி. ஆர். நகரில் பலசரக்கு கடை வைத்து அங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி இவர்கள் மதுரையில் இருந்து கோவில் திருவிழாற்காக தங்களது சொந்த ஊரான பெரியசாமிபுரம் கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர்.
நேற்றைய தினம் (அக்.,17) திருவிழா முடிந்த நிலையில் இன்று (அக்.,19) காலையில் அக்குடும்பத்தினர் பெரியசாமிபுரம் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, 5 பெண்கள் அலையில் சிக்கி நீரில் மூழ்கி தவித்துள்ளனர்.
இதனைக் கண்ட அவர்களது உறவினர்கள் அவர்கள் 5பேரையும் மீட்டு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர், இலக்கியா மற்றும் கன்னியம்மாள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மற்ற 3 பேரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேம்பார் கடலோர காவல் படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.