பீடி இலைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்!

1524பார்த்தது
தூத்துக்குடியில் இருந்து காயல்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை அடுத்து, சுங்கத் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு தனியாா் கிட்டங்கி அருகே ஒரு வேனில் சரக்கு ஏற்றிக் கொண்டிருந்ததைக் கண்ட சுங்கத்துறையினா், அங்கு சென்று சோதனை நடத்தினா்.  

அதில், 22 பண்டல்களில் 19, 780 பூச்சிக் கொல்லி மருந்து பாக்கெட்டுகள், 17 பண்டல்களில் இருந்த 450 கிலோ பீடிஇலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த தூத்துக்குடி இனிகோ நகரை சோ்ந்த போஸ் (30), மில்டன்(27) ஆகியோரை சுங்கத்துறையினா் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியாா் கிடங்கில் பீடி இலைகள், பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவற்றை பதுக்கி வைத்து வேன் மூலம் காயல்பட்டினம் கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்த பீடிஇலை, பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.  

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ. 32 லட்சம் இருக்கும் என சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி