போரூர் ஆற்காடு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிழற்குடை, 'பைக்' நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், போரூர் ஆற்காடு சாலையில், சாலையோரம் உள்ள பேருந்து நிழற்குடை அகற்றப்பட்டது.
இதையடுத்து, பயணியரை வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க, சாலையோரம் தற்காலிகமாக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
போரூர் சந்திப்பு அருகே, வளசரவாக்கம் செல்லும் சாலையில் தற்காலிக பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்து நிழற்குடையை பயணியர் பயன்படுத்த முடியாத நிலையில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதனால், பயணியர் சாலையில் நிற்க வேண்டியுள்ளது. எனவே, 'பைக் பார்க்கிங்' பகுதியாக மாறி உள்ள தற்காலிக பேருந்து நிழற்குடையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.