சேதுபாவாசத்திரம் பகுதியில் கருவாடு காய வைக்கும் பணி தீவிரம்

69பார்த்தது
வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் சேதுபாவாசத்திரம் பகுதியில் கருவாடு காய வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு தொடங்கி செம்பியன் மாதேவிபட்டினம் வரை 34 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் 4500 நாட்டு படகுகள் உள்ளன. மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் 146 விசைப்படகு உள்ளது. இதன் மூலம் பிடித்து வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் உடனடியாக விற்பனை செய்தும், வெளியூர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மீனவர்கள் வலையில் சிக்கும் கழிவாகக் கூடிய சிறிய மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களை வாங்கி துறைமுகத்திலேயே காய வைத்து கருவாடு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். கருவாடுகளை விட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறிய வகை சங்காயம் மீன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த மீன்களை மொத்தமாக வாங்கி காய வைத்து கிலோ 10 முதல் 12 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் பகுதி கோழி தீவனத்துக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கருவாடு காய வைக்கும் பணி, தரம் பிரிக்கும் பணி, ஏற்றுமதி மணி என இவற்றில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தற்போது வெயில் கொளுத்தி வருவதால் கருவாடு, சங்காயம் காய வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி