கட்டாச்சிகுண்டு குளம் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுமா....?

80பார்த்தது
கட்டாச்சிகுண்டு குளம் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுமா....?
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் - துறவிக்காடு இடையே அறந்தாங்கி சாலையில், துறவிக்காடு ஏ. கே. என் திருமண மண்டபம் அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டாச்சி குண்டு குளம் உள்ளது. இக்குளத்தின் கரையில், மர்ம நபர்கள் சிலர் குப்பைகள், பழைய டயர்கள், மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதும், அதற்கு தீ வைப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இதனால், சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. கரும்புகை சாலையை மறைப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், கடும் துர்நாற்றம் காரணமாகவும், டயர்களை எரிப்பதால் ஏற்படும் புகை காரணமாக இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சுவாசக்கோளாறுகள், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. கோழி இறைச்சிக் கழிவுகளை, காகம், கழுகுகள், நாய்கள் இழுத்துச் சென்று குடியிருப்பு பகுதியில் போட்டுச் செல்வதும் வழக்கமாக உள்ளது.  

இது குறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் மனக்குமுறலாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் இது குறித்து ஆய்வு செய்து நீர்நிலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.