வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் நீலா தெற்கு மடவிளாகத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் சுரேஷ் (38). இவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு தினக்கூலியாக வேலை செய்து வந்தேன். எனது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இதில் வரக்கூடிய
வருமானம் போதாததால் வெளிநாட்டுக்கு செல்ல எண்ணி கும்பகோணம் அய்யாவாடியை சேர்ந்த சாய் சுதாகர் என்பவரை அணுகினோம்.
அவர் டிராவல் ஏஜென்சி வைத்து ஏற்கனவே வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக தெரியவந்தது. இதையடுத்து அவர் என்னிடம் கனடாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக சொல்லி 26. 3. 2023 அன்று ரூ. 3 லட்சம் முன்பணமாக பெற்றுக் கொண்டார். ஆனால் இது வரை வெளிநாட்டிற்கு என்னை அனுப்பவில்லை. கேட்கும் போதெல்லாம் அனுப்புவதாக கூறி ஏமாற்றி வருகிறார். எனவே இவர் மற்றும் இதில் தொடர்புடைய சிலர் மீது தக்க நடவடிக்கை எடுத்து நான் செலுத்திய ரூ. 3 லட்சத்தை பெற்றுத் தருமாறு வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளார்.