பாபநாசம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரும் 9 ஆம் தேதி நடப்பதை முன்னிட்டு விழாக் குழுவினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் பாபநாசத்தில் நேற்று(செப்.6) நடைபெற்றது. கூட்டத்துக்கு பாபநாசம் டிஎஸ்பி முருகவேலு தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
களி மண்ணால் தயார் செய்த விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகள் நீரில் கரையக்கூடியதாக நச்சுத் தன்மையற்றதாக இருக்க வேண்டும். இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற மத தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கூடாது. மதவெறியை தூண்டும் வகையிலும் பிற மதத்தினரின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலும் முழக்கங்களை எழுப்புதல் கூடாது. விநாயகர் சிலைகளை வைக்கும் இடங்களிலோ ஊர்வலப் பாதைகளிலோ மற்றும் சிலைகளை கரைக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி கிடையாது.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் அந்தந்த விநாயகர் சிலைகள் விழாக் குழுவினர் கண்காணிப்பு கேமரா வைத்திருக்க வேண்டும். நடைமுறைகளை மீறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.