விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மலையடிப்பட்டி வடக்கு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவி கனி மகன் ஆனந்தராஜ் (வயது 41). இவர் ஆம்னி காரில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை கடத்திச் சென்று தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஆம்னி கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் காரில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் காரை ஓட்டி வந்தவர் மலையடிப்பட்டி ஆனந்த ராஜ் என தெரியவந்தது. இதனையடுத்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து கார் மற்றும் அதில் இருந்த குட்கா, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆனந்தராஜை போலீசார் சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.