சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர் ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் ஒரு வகையான வைரல் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சிவகங்கை, காரைக்குடி, இளையான்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட நகரங்களில் கழிவுநீர் கால்வாய், வடிகால் அடைப்பாலும், பல இடங்களில் வடிகால் வசதி இல்லாததாலும் மழைநீர் தேங்கியுள்ளன. கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தினமும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அதேபோல் காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர் ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் அன்மையில் சொந்த ஊர் சென்று திரும்பிய நிலையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.