விராலிமலை: திருச்சி மாவட்டம் குண்டூர் ஊராட்சி அய்யம்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம்(20), அதே பகுதியை சேர்ந்தவர் சிவன்ராஜ் (19). நண்பர்களான இருவரும் மாத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பட்டப்படிப்பு படித்து வந்தனர். கடந்த 24ம் தேதி காலை பைக்கில் கல்லுாரிக்கு செல்லும் வழியில், மாத்தூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திருச்சி நோக்கி சென்ற கார் மோதியது. இதில் மாணவர் முருகானந்தம் அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த சிவன்ராஜ் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம்(நவம்பர் 9) உயிரிழந்தார். இதுகுறித்து மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.