சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மொரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் 41, இவர் சென்னையில் உள்ள பாரிஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவதற்காக பட்டாசு கொள்முதல் செய்வதற்கு சென்னையில் இருந்து சிவகாசிக்கு சரக்கு வாகனத்தில் வந்துள்ளார். நேற்று இரவு சென்னையில் புறப்பட்ட யுவராஜ் அந்த வாகனத்தை தானே ஓட்டிக்கொண்டு இன்று அதிகாலை பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள், யுவராஜ் வாகனத்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். வாகனத்தை விட்டு இறங்கிய யுவராஜை கண்மூடித்தனமாக தாக்கி, கத்தியால் குத்திவிட்டு அவரிடம் இருந்த ரூபாய் 10 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். ரத்த காயத்துடன் வாகனத்தை எடுத்துக் கொண்டு அருகே இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்ற யுவராஜ் உதவி கேட்டுள்ளார். பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,